உள்ளூர் செய்திகள்
வீட்டுக்குள் திடீர் பள்ளம்

ஊரப்பாக்கத்தில் வீட்டுக்குள் திடீர் பள்ளம் - வெள்ளம் ஓடியதால் பரபரப்பு

Published On 2021-12-01 12:59 GMT   |   Update On 2021-12-01 12:59 GMT
ஊரப்பாக்கத்தில் வீட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு அதன் வழியாக வெள்ளம் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. அதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நந்திவரம் ஊரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

மேலும் ஜெகதீஷ் நகர் 2-வது குறுக்கு தெரு அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் அடையாறு கால்வாய் செல்கிறது.

இந்த கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி கொண்டிருப்பதன் காரணமாக அடையாறு கால்வாய் அருகில் உள்ள குணசேகரன் என்பவரது வீட்டின் அறையில் திடீரென 10 அடி அகலத்துக்கு உள்வாங்கி திடீர் பள்ளம் ஏற்பட்டது.

அந்த பள்ளத்தில் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்துக்கு வெள்ளம் ஓடுவதை பார்த்த வீட்டில் இருந்த குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தரை உள்வாங்கிய போது குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தப்பினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News