வழிபாடு
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்த போது எடுத்த படம்.

21 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கு

Published On 2022-01-28 05:00 GMT   |   Update On 2022-01-28 05:00 GMT
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்து உபயதாரர்களால் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு செய்ய கடந்த மாதம் 22-ந் தேதி பந்தக்கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் தொடங்கியது.

தொடர்ந்து 24-ந் தேதி இரவு முதல் கால யாக சாலை பூஜையும், 25-ந் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் அன்று மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் 26-ந் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜையும்,, மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

குடமுழுக்கு நாளான நேற்று அதிகாலை விநாயகர் வழிபாட்டுடன் ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்று தொடர்ந்து தீபாராதனையுடன் கடம் புறப்பாடு நடந்தது. காலை 9.12 மணிக்கு விமான திருக்குடமுழுக்கும் தொடர்ந்து மூலவர் நாடியம்மனுக்கு மகா திருக்குட முழுக்கும் ஒரே நேரத்தில் நடந்தது.

குடமுழுக்கு நிகழ்ச்சியை தொடர்ந்து அன்னதானமும், மாலையில் மகா அபிஷேகமும் நடந்தது. குடமுழுக்கு விழாவைக் காண ஏராளமான பக்தர்கள் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலிருந்தே கோவிலுக்கு வந்த வண்ணமாக இருந்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டதால் பலர் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பிரபாகர், தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, பட்டுக்கோட்டை அறநிலையத்துறை ஆய்வாளர் பிரகாஷ், செயல் அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். குடமுழுக்கின்போது கோவில் மேல் தளத்தில் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News