செய்திகள்
மரணம்

பாளை சிறையில் கைதி கொலை- உடலை ஒப்படைக்க அதிகாரிகள் 4-வது நாளாக பேச்சுவார்த்தை

Published On 2021-04-26 13:04 GMT   |   Update On 2021-04-26 13:04 GMT
இன்று 4-வது நாளாக அவரது உறவினர்களிடம் போலீஸ் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் முத்துமனோவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமனோ (வயது 27).

கொலை முயற்சி வழக்கில் ஒன்று கைதான இவரை கடந்த 22-ம் தேதி இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு பாளை மத்திய சிறையில் அடைத்தனர். அப்போது சிறையில் 7 கைதிகள் முத்துமனோவை கல்லால் தாக்கினர். இதை தடுத்த முத்துமனோவின் நண்பர்களையும் தாக்கினர். இந்த தாக்குதலில் முத்துமனோ பலியானார்.

இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் 7 கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக துணைஜெயிலர்கள் உள்பட 6 சிறைக்காவலர்கள் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர்.

இதற்கிடையே முத்துமனோவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினரிடம் ஒப்படைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் முத்து மனோவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து பாளை மத்திய சிறை முன்பும், வாகைகுளத்திலும் போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடந்த 3 நாட்களாக முத்துமனோவின் உடலை அவர்கள் வாங்க மறுத்து விட்டார்கள்.

இந்த நிலையில் முத்துமனோ கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றி நேற்று தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். இதனால் நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு விசாரணையை ஏற்க தயார் நிலையில் உள்ளார்கள்.

பாளை போலீஸ் உதவி கமி‌ஷனர் ஜான்பிரிட்டோ இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளார்.இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முத்துமனோவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூறிய பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதி அளித்துள்ளது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளது.

இன்று 4-வது நாளாக அவரது உறவினர்களிடம் போலீஸ் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் முத்துமனோவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News