செய்திகள்
வானிலை நிலவரம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக 30-ந்தேதி உருவாகிறது- 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

Published On 2021-11-28 07:18 GMT   |   Update On 2021-11-28 07:31 GMT
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாக இருந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக நாளை மறுநாள் (30-ந்தேதி) உருவாகும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் போது வலுவடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 30-ந்தேதி உருவாகிறது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வட மேற்கு திசையில் நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுவடையும் சமயத்தில் தமிழகத்தில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (28-ந்தேதி) கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

நாளை (29-ந்தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

30-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.



டிசம்பர் 1-ந்தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

2.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இவ்வாறு அவர் கூறினார். 


Tags:    

Similar News