வழிபாடு
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தபோது எடுத்தபடம்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவிலில், மயான சூறை நிகழ்ச்சி

Published On 2022-03-01 03:41 GMT   |   Update On 2022-03-01 03:41 GMT
மகாசிவராத்திரியை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் ரெயில்வே சாலையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று மயான சூறை நிகழ்ச்சி நடந்தது.

இதை முன்னிட்டு கடந்த 26-ந் தேதி காவிரி குளக்கரையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று கரகம் புறப்பாடு நடந்தது. அப்போது பால் காவடி, அலகு காவடி சுமந்த பக்தர்கள், பரமசிவன், பார்வதி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

அதைத்தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News