செய்திகள்
கோப்புப்படம்

ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது - 5ஜி சேவைக்கான ஏலம் இப்போது இல்லை

Published On 2021-03-01 21:10 GMT   |   Update On 2021-03-01 21:10 GMT
சுமார் 4 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் பணி தொடங்கியது. 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் பின்னர் நடைபெறும்.
புதுடெல்லி:

மொபைல் போன் சேவைகளுக்கான அலைக்கற்றைகள் (ஸ்பெக்ட்ரம்) ஏலம் விடும் பணி நேற்று தொடங்கியது. அதிர்வெண் அடிப்படையில், 7 வகையான தொகுப்பில் ஏலம் விடப்படுகிறது.

700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ், 2,100 மெகா ஹெர்ட்ஸ், 2,300 மெகா ஹெர்ட்ஸ், 2,500 மெகா ஹெர்ட்ஸ் என 7 அதிர்வெண் தொகுப்புகள் ஏலம் விடப்படுகின்றன. இவற்றின் மொத்த ஆரம்ப விலை ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் கோடி ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய 3 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. சந்தையில் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் கோடி நிகர மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் ஜியோ, ஏலத்தில் பங்கேற்க ரூ.10 ஆயிரம் கோடி விருப்பத்தொகை செலுத்தி உள்ளது.

ரூ.71 ஆயிரத்து 303 கோடி நிகர மதிப்பு கொண்ட ஏர்டெல் நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடி விருப்பத்தொகை செலுத்தி உள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.475 கோடி விருப்பத்தொகை செலுத்தி உள்ளது.

ஏலம் எடுக்கும் நிறுவனம், ஏலத்தொகையை ஒரே தவணையில் செலுத்தலாம். அல்லது, 25 சதவீத தொகையையோ, 50 சதவீத தொகையையோ முதலில் செலுத்திவிட்டு, மீதியை அதிகபட்சம் 16 தவணைகளில் செலுத்தலாம். 2 ஆண்டுகளுக்கு இந்த ஸ்பெக்ட்ரமை மறுவிற்பனை செய்ய முடியாது. ஸ்பெக்ட்ரம், 20 ஆண்டுகள் செல்லுபடி ஆகும்.

இந்த தடவை ஸ்பெக்ட்ரம் ஏலம், பெரிய தொகைக்கு போகாது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

5ஜி மொபைல் சேவைக்கு பயன்படும் 3 ஆயிரத்து 300 மெகா ஹெர்ட்ஸ் முதல் 3 ஆயிரத்து 600 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படவில்லை. அவை பின்னாளில் ஏலம் விடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News