செய்திகள்
உச்ச நீதிமன்றம்

40 நாட்கள் தொடர் விசாரணை: உச்ச நீதிமன்ற வரலாற்றில் இரண்டாமிடம் பிடித்த அயோத்தி வழக்கு

Published On 2019-11-09 10:45 GMT   |   Update On 2019-11-09 10:45 GMT
உச்ச நீதிமன்ற வரலாற்றில் தொடர்ந்து அதிக நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் அயோத்தி வழக்கு இரண்டாமிடத்தில் உள்ளது.
புதுடெல்லி:

சுதந்திரம் அடைந்த பின்னர் 1950ம் ஆண்டு இந்தியாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5 இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. 69 ஆண்டு காலமாக பல்வேறு மிக முக்கிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. கடந்த 2010ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இவ்வழக்கு தொடர்பாக தொடர்புடையவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் சமரகுழு ஒன்றை ஏற்படுத்தியது. இந்த சமரச குழுவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 6 தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்ற விசாரணை கடந்த மாதம் (அக்டோபர்) 16ம் தேதி முடிவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் தொடர் விசாரணை நடைபெற்ற இரண்டாம் வழக்காகும். முதலிடத்தில் கேசவானந்த பாரதி வழக்கு இடம்பிடித்துள்ளது.

கேரள மாநிலம் எதனீர் மடத்தின் தலைவர் கேசவனாந்த பாரதி, மாநில அரசின் நிலச் சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 1970ம் ஆண்டு மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கில் 1973ம் ஆண்டு கேசவானந்த பாரதிக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வழக்கில் மொத்தம் 68 நாட்கள் தொடர் விசாரணை நடைபெற்றது. 

இதற்கு அடுத்தபடியாக, ஆதார் திட்டம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் 38 நாட்கள் தொடர் விசாரணை நடைபெற்றது. இது அதிக நாட்கள் நடந்த விசாரணை வழக்குகளின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News