செய்திகள்
போலியோ சொட்டு மருந்து முகாம்.

தூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமில் பணியாற்ற 5 ஆயிரம் பணியாளர்கள்- கலெக்டர் தகவல்

Published On 2020-01-10 11:41 GMT   |   Update On 2020-01-10 11:41 GMT
தூத்துக்குடியில் 19-ந் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துதல் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 629 பயன்பெற உள்ளனர். மேலும் போலியோ சொட்டு மருந்து வழங்க 1,222 மையங்கள் செயல்பட உள்ளன. நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வருபவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் மற்ற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5 ஆயிரத்து 238 பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த பணிகளுக்கு 134 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் 5 வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு குழந்தைகளையும் விடுபடாத வகையில் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிரு‌‌ஷ்ணலீலா, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News