ஆன்மிகம்
முருகன்

தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது

Published On 2021-11-05 09:18 GMT   |   Update On 2021-11-05 09:18 GMT
திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்பட தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. சூரசம்ஹாரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருச்செந்தூர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக ஆன்லைன் மூலமாக 5 ஆயிரம் பக்தர்கள், நேரில் வருபவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

2-ம் திருவிழாவான இன்று முதல் 5-ம் திருவிழாவான 8-ந்தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை நடக்கிறது.

சிகர நிகழ்ச்சியாக சூரசம் ஹாரம் 9-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மதியம் விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 10-ந்தேதி இரவு திருக் கல்யாண வைபவம் நடக்கிறது. கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பழனி

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி விழா நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 7 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 9-ம் தேதி மாலை கிரி வீதியில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 10-ம் தேதி காலை மலைக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.
 
இவ்விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் 7 நாட்கள் விரதமிருந்து. மலைக் கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வார்கள். திருவிழாவுக்கு கொரோனா கட்டுப்பாடு காரணமாக சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போல் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து கோவில் யானை கஸ்தூரி மலைக்கோவிலுக்கு சென்றது. பின்பு உச்சிக்கால பூஜையின் போது. காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவறையில் உள்ள விநாயகர், முருகன் சண்முகர், துவாரபாலகர் உள்ளிட்ட அனைத்து சாமி சிலைகளுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போழுது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

திருத்தணி

திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை நடை பெற உள்ளது. கொரோனா தொற்று முன் எச்சரிக்கை நட வடிக்கையாக கோவி லில் லட்சார்ச்சனைக்கு அனுமதி இல்லை. விழா நாட்களில் பக்தர்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 9-ந் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறும் புஷ்பாஞ்சலி மற்றும் 10-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதற்கு மாறாக பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் வலை தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய் துள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடை வெளியை பின்பற்றியும், கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தும் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News