செய்திகள்
பொன்.ராதாகிருஷ்ணன்

உள்ளாட்சி தேர்தல்- பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 9 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்

Published On 2021-09-15 04:41 GMT   |   Update On 2021-09-15 04:41 GMT
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி இடங்களை பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை:

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தமிழக பா.ஜ.க.வில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா இரண்டு பேர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். யார்-யாரை எந்தெந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிப்பது என்பது பற்றி மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

இதற்கிடையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனு வாங்குவதும் தொடங்கி உள்ளது.

இன்று காலை செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிட விரும்புபவர்களிடம் கூடுவாஞ்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து மனுக்கள் பெறப்பட்டது. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் மனுக்களை வாங்கினார்கள்.

மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட விரும்புவர்கள் இடம் ஸ்ரீபெரும்புதூரில் மனுக்கள் வாங்குகிறார்கள்.

கூட்டணியை பொறுத்தவரை பா.ஜனதா அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ளது. அதேநேரம் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி இடங்களை பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News