செய்திகள்
பி.சி.சி.ஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்பு

பி.சி.சி.ஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி

Published On 2019-10-23 07:54 GMT   |   Update On 2019-10-23 07:54 GMT
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39-வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 2016 ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது முறைகேடு வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை சீரமைப்பதற்காக நீதிபதி லோதா தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாததால் பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து பி.சி.சி.ஐ.யை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. புதிதாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் பதவியேற்றவுடன் இந்த நிர்வாக குழு பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து பி.சி.சி.ஐ நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

உச்சநீதிமன்றத்தின் நிர்வாக குழுவின் 33 மாத நிர்வாகம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ தலைவராக அதிகாரப்பூர்வமாக சவுரவ் கங்குலி இன்று பதவியேற்றார். மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் பதவியேற்றார். அடுத்த 9 மாதங்களுக்கு கங்குலி பிசிசிஐ-க்கு தலைமை தாங்குவார். 

மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மா புதிய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜே ஷா செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர்களும் இன்று பதவியேற்றனர்.

முன்னாள் பி.சி.சி.ஐ தலைவரும், நிதித்துறை இணை மந்திரியுமான அனுராக் தாக்கூரின் தம்பி அருண் துமால் பொருளாளராகவும், கேரளாவைச் சேர்ந்த ஜெயேஷ் ஜார்ஜ் இணை செயலாளராகவும் பதவியேற்றுள்ளனர்.

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News