செய்திகள்
ஜி.ராமகிரு‌‌ஷ்ணன்

கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது- ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் பேச்சு

Published On 2021-01-11 03:40 GMT   |   Update On 2021-01-11 03:40 GMT
புதுவை அரசை சீர்குலைக்க நினைத்தால் கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரி:

கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக அண்ணா சிலை அருகே நேற்று 3-வது நாளாக நடந்த தர்ணா போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

கவர்னர் கிரண்பேடி தனது பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக புதுவை அரசு, காவல்துறை, மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல் துணை ராணுவத்தை வரவழைத்து நாடகமாடுகிறார். டெல்லியில் 45 நாட்களுக்கு மேலாக வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள ஆட்சியாளர்கள் யாரும் பாதுகாப்புக்கு அஞ்சி துணை ராணுவத்தை அழைக்கவில்லை.

புதுவை மட்டுமின்றி இந்தியா முழுவதும் பா.ஜ.க. அல்லாத ஆளும் அரசுகளை கவிழ்க்க கூடிய மோசமான கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுவையை ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பல முயற்சி நடந்தது. ஆனால் முடியவில்லை. மத்திய அரசின் கருவியாகவும், பிரதிநிதியாகவும் கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். இங்கு பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிரண்பேடி தனியாக ஆட்சி நடத்துகிறார். புதுவைக்கான சுதந்திரம், சுயமரியாதை மற்றும் அரசை சீர்குலைக்க நினைத்தால் அவர் கவர்னர் பதவியில் நீடிக்க முடியாது. அதற்கான அனைத்து போராட்டத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News