செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

ஆன்லைன் வகுப்புகளுக்கான புத்தகம் உள்ளிட்டவற்றை குழந்தைகள் காப்பகங்களுக்கு வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-12-16 00:54 GMT   |   Update On 2020-12-16 00:54 GMT
குழந்தைகள் காப்பகங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புத்தகம் உள்ளிட்டவற்றை 30 நாள்களுக்குள் வழங்க மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, அங்குள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

அப்போது, சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் கவுரவ் அகர்வால் ஆஜராகி, கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் காப்பகங்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 518 குழந்தைகள் இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 788 குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநிலங்கள் தெரிவித்துள்ளன. குழந்தைகள் காப்பகங்களில் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க உரிய உள்கட்டமைப்புகள் உள்ளனவா என்பதை குழந்தைகள் நலக் குழுக்களும், சிறார் நீதி ஆணையமும் ஆய்வு செய்ய வேண்டும். கோவா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கு கல்வி போதிக்க வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோன்ற முன்மாதிரிகளை பிற மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும் என்றார்.

குழந்தைகள் நல ஆணையத்தின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், குழந்தைகளுக்கு ஏற்புடைய அனைத்தும் ஆணையத்துக்கும் ஏற்புடையவையே. குழந்தைகள் காப்பகங்களின் செயல்பாடுகளை குழந்தைகள் நல ஆணையம் கண்காணித்து வருகிறது என்றார்.

தமிழகத்தின் சார்பில் கூடுதல் அட்டார்னி ஜெனரல் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆஜராகி, தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி மூலம் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான புத்தகம் உள்ளிட்டவற்றை குழந்தைகள் காப்பகங்களுக்கு 30 நாள்களுக்குள் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் வழங்க வேண்டும். அங்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். காப்பக குழந்தைகள் இறுதித்தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் வகுப்புகளை நடத்த மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். குழந்தைகள் காப்பகங்களில் மேம்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த அறிக்கையை மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அளிக்க வேண்டும். காப்பகங்களில் இருந்த குழந்தைகள், பொருளாதார நெருக்கடியால் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை இருந்தால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் பரிந்துரையின் பேரில் ஒவ்வொரு குழந்தைக்கும் மாநில அரசுகள் தலா ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
Tags:    

Similar News