செய்திகள்
டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி- குவாட் மாநாடு, ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்பு

Published On 2021-09-22 06:06 GMT   |   Update On 2021-09-22 08:33 GMT
குவாட் உச்சி மாநாட்டுக்கு இடையே வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுடெல்லி:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுசபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாஷிங்டனில் குவாட் மாநாடும் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், நேற்று முன்தினமே நியூயார்க் சென்றுவிட்டார்

பிரதமர் மோடியுடன் செல்கிற உயர் மட்டக்குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா மற்றும் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே, வாஷிங்டனில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு, 24-ந்தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில்  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

குவாட் உச்சி மாநாட்டுக்கு இடையே வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

வாஷிங்டன் பயணத்தை முடித்துக்கொண்டு  நியூயார்க் நகருக்கு செல்லும் மோடி, 25-ந்தேதி ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76-வது அமர்வில் கலந்துகொண்டு பேசுகிறார். பின்னர் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி திரும்புகிறார்.
Tags:    

Similar News