செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

Published On 2021-10-09 11:50 GMT   |   Update On 2021-10-09 11:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 5-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 15 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 10 லட்சத்து 40 ஆயிரத்து 820 பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 2 லட்சத்து 89 ஆயிரத்து 13 பேருக்கு 2-வது டோஸ் போடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 10 ஆயிரத்து 269 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு 84 நாட்கள் கழித்து, 1 லட்சத்து 33 ஆயிரத்து 427 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தி கொண்டவர்களுக்கு, கொரோனா நோய் அறிகுறி ஏற்பட்டாலும் அவசர சிகிச்சை தேவைபடாமலும், ஆக்ஸிஜன் தேவை ஏற்படாமலும் இருக்கும். எனவே, பொதுமக்கள் அனைவரும் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் 87 ஊராட்சிகளில் 100 சதவீதம் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) 800-க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலம் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த முடியும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் உடன் இருந்தார்.
Tags:    

Similar News