செய்திகள்
மல்லிகைப்பூ

மதுரை மல்லிகை ஒரு கிலோ ரூ.700-க்கு விற்பனை

Published On 2021-07-16 02:54 GMT   |   Update On 2021-07-16 02:54 GMT
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த வாரம் முதல் கோவில்களில் வழிபாடு நடத்தவும், திருமண நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
மதுரை:

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் எலியார்பத்தி, பாரப்பத்தி, வலையன்குளம், குசவன் குண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூக்கள் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த காலங்களில் மல்லிகை பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் அதனைப் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர்.

இதற்கிடையே கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த வாரம் முதல் கோவில்களில் வழிபாடு நடத்தவும், திருமண நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மல்லிகைப்பூக்களின் விலையும் படிப்படியாக உயர தொடங்கியது. அதன்படி, கடந்த வார தொடக்கத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.200-க்கு விற்பனையானது. 10-ந்தேதி ஒரு கிலோ மல்லிகை ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுபோல் ஒரு கிலோ பிச்சி பூ ரூ.500, முல்லை ரூ.400, அரளி ரூ.250, சம்பங்கி ரூ.100, செவ்வந்தி ரூ.150, பட்டன்ரோஸ் ரூ.150, தாமரைப்பூ ரூ.10 என விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், "கொரோனா காலத்திற்கு முன்பு திருவிழா, சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் தினத்தில் மதுரை மல்லியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.4000 வரை சென்ற நாட்களும் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக மல்லிகை பூக்கள் விற்பனை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.

தற்போது அந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து, விற்பனை சீராக நடைபெறுகிறது. மேலும் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, படிப்படியாக பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஆடி மாதம் தொடங்குவதால், வரும் நாட்களிலும் பூக்களின் விலை மேலும் உயரும். கொரோனாவிற்கு பின்னர் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.700-க்கு விற்பனை செய்ததே, அதிகபட்ச விலையாக உள்ளது" என்றனர்.
Tags:    

Similar News