செய்திகள்
ஸ்டார்கள்

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது- ஸ்டார்கள் விற்பனை மும்முரம்

Published On 2019-12-01 16:59 GMT   |   Update On 2019-12-01 16:59 GMT
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் ஸ்டார்கள் மும் முரமாக விற்பனை செய்யப்படுகிறது.
நாகர்கோவில்:

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு  உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறும். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் சிலைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அதே போல கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருட்கள், பலூன்களை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டி தொங்கவிடுவார்கள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 24 நாட்களே உள்ளதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குமரி மாவட்டத்தில் தொடங்கி விட்டது. வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விடப்படும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பல விதமான வண்ணங்களில், வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

நாகர்கோவிலில் மணி மேடை பகுதி, டதி ஸ்கூல் சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான ஸ்டார்கள் மும் முரமாக விற்பனையாகிறது. குடில் அமைக்கும் பொருட்களும் இந்த ஆண்டு பல வித அளவுகளில் கண்ணை கவரும் விதத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. கிறிஸ்துமஸ் கேக்குகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இயேசுவின் நற்செய்தியை மக்களிடம் எடுத்துக்கூறி பரிசு பொருட்களை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறும், கிறிஸ்துமஸ் தாத்தா பவனி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும். டிசம்பர் 1-ந்தேதி இன்று பிறந்து உள்ளதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா பவனி தொடங்கி உள்ளது. இனிமையான பாடல்களை பாடியப்படி வீடுகள் தோறும் சென்று கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கி வாழ்த்து கூறி வருகிறார். மேலும் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் ஜவுளி கடைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
Tags:    

Similar News