செய்திகள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்கள்

கோவேக்சின் 2வது ‘டோஸ்’ தடுப்பூசி போட சிறப்பு மையங்களில் குவிந்த மக்கள்

Published On 2021-06-23 08:56 GMT   |   Update On 2021-06-23 08:56 GMT
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 19 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 45 சிறப்பு முகாம்கள் மூலமாக தடுப்பூசி இன்றும், நாளையும் செலுத்தப்படுகிறது.
சென்னை:

கொரோனா நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே ஆயுதமாகும். அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையில் இதுவரை 23 லட்சத்து 62 ஆயிரத்து 991 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் 59 ஆயிரம் பேர் உள்ளனர். முதல் தடுப்பூசி போட்டு 28 நாட்கள் கழித்தவர்கள் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய காலம் கடந்து இருப்பவர்கள் இந்த சிறப்பு முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 19 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 45 சிறப்பு முகாம்கள் மூலமாக இந்த தடுப்பூசி இன்றும், நாளையும் செலுத்தப்படுகிறது. இதற்காக 62,050 கோவேக்சின் தடுப்பூசிகள் அனைத்து முகாம்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் காலம் கடந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி சென்னையில் உள்ள சிறப்பு முகாம்களில் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் 7 மணிக்கே வரிசையில் நிற்கத் தொடங்கினார்கள். கூட்டம் அதிகமாக இருந்த முகாம்களில் டோக்கன் வழங்கப்பட்டது. 200 பேர் வீதமாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்று தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி இந்த முகாம்கள் நடைபெற்றது.
Tags:    

Similar News