செய்திகள்
ஓட்டுப்பதிவு எந்திரங்களை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

விக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

Published On 2019-10-22 13:55 GMT   |   Update On 2019-10-22 13:55 GMT
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம்:

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. இதற்காக 275 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 344 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் 358  விவிபேட் எந்திரங்கள். இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. 

இந்த தொகுதியில் கடந்த தேர்தலைவிட தற்போது அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலில் 81.71 சதவீதம் பதிவாகி இருந்தது, தற்போது 84.36 சதவீதம் பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

வாக்குபதிவு முடிந்ததும், மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  எந்திரங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தேர்தல் அலுவலர்கள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அருகே முத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வந்தனர். லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த பணி இன்று அதிகாலை வரை நீடித்தது. அதன் பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் விழுப்புர மாவட்ட கலெக்டருமான சுப்பிரமணியன், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் மின் னணு எந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், ஆயுத படை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயரங்கன் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

துணை ராணுவத்தினரும் பாதுகாப்பில் உள்ளனர். வாக்கு எண்ணப்படும் அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பகுதி முழுவதும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இதனை தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற 24-ந் தேதி காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. அப்போது யார் வெற்றிபெறுவார் என்பது தெரியவரும். 
Tags:    

Similar News