செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் மீண்டும் தொற்று அதிகரிப்பு- கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை

Published On 2021-04-07 07:19 GMT   |   Update On 2021-04-07 07:19 GMT
தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக பொதுமக்கள் பொது இடங்களில் கூடியதாலும், அரசியல் கட்சிகளின் பிரசாரமும் கொரோனா தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தன.
சென்னை:

உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், ஒருபுறம் தொற்று பரவல் பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரிக்க தொடங்கியது. சட்டசபை தேர்தல் காரணமாக பொதுமக்கள் பொது இடங்களில் கூடியதாலும், அரசியல் கட்சிகளின் பிரசாரமும் தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தன.

முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பே வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்காக 16 ஆயிரம் களப்பணியாளர்கள், தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டது. மேலும் 100 மருத்துவர்கள் மற்றும் 4 ஆயிரம் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களை நியமித்தது.


கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவிய போது மேற்கொள்ளப்பட்ட வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை, கண்காணிப்பு, வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் இதனை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் தள்ளி வைக்கப்பட்டது. கட்சி பிரதிநிதிகள் வீதி வீதியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் காய்ச்சல் பரிசோதனை செய்யும் போது அது பலன் அளிக்காது. தொற்றுப்பரவல் மேலும் அதிகரிப்பதோடு துல்லியமாக கணக்கிட முடியாது என்பதால் இத்திட்டம் தேர்தல் முடிந்த பின்னர் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சட்டசபை தேர்தல் நேற்று முடிந்ததை தொடர்ந்து நாளை (8-ந்தேதி)முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தொடங்குகிறது.

இந்த பணியில் ஏற்கனவே ஈடுபடுத்தப்பட்ட ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு, ராயபுரம், அம்பத்தூர் மண்டலங்களில் அதிகமான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15 மண்டலங்களிலும் உள்ள வார்டுகள் வாரியாக களப்பணியாளர்கள், அந்தந்த சுகாதார ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு வீடாக செல்லும் போது முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறியவும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரமும் பெறவேண்டும் என்று களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பும், தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News