செய்திகள்
ஜிகே மணி

20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி

Published On 2021-05-11 10:20 GMT   |   Update On 2021-05-11 14:28 GMT
பா.ம.க. தோல்விக்கும், அதிமுக கூட்டணி தோல்விக்கும் இட ஒதுக்கீடு காரணம் இல்லை என பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாமக, பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன. தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமக 23 இடங்களில் போட்டியிட்டு ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜனதா 20 இடங்களில் போட்டியிட்டு நான்கில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதிமுக கூட்டணியின் தோல்விக்கு வன்னியர் உள்ஒதுக்கீடும், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததும்தான் முக்கிய காரணம் என வெளிப்படையாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் பாமக தலைவர் ஜி.கே. மணி ‘‘நாங்கள் 20 இடங்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம், ஆனால் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது. பாமக, அதிமுக கூட்டணி தோல்விக்கு வன்னியர் உள்ஒதுக்கீடு காரணம் அல்ல’’ என்றார்.
Tags:    

Similar News