செய்திகள்
வீட்டில் உள்ள அறையில் பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி

அரசு ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை-ரூ.2 லட்சம் கொள்ளை

Published On 2021-10-25 08:21 GMT   |   Update On 2021-10-25 08:21 GMT
துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அடுத்த வடமதுரை வி.எஸ்.நகரை சேர்ந்தவர் கரிகாலன் (வயது60). இவர் தமிழக அரசு பொதுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருக்கு ராணி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி விட்டது. அனைவரும் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

கடந்த 23-ந் தேதி அதிகாலை கரிகாலன் சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் சென்றார். அங்கு நிகழ்ச்சிகள் முடிந்ததும் நேற்று மாலை சேலத்தில் இருந்து மீண்டும் கோவைக்கு திரும்பினார்.

இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். காரை விட்டு இறங்கிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தை பார்த்தும் பதறி போயினர். ஏதோ அசம்பாவிதம் நடந்ததை அறிந்த அவர்கள் வேகமாக வீட்டிற்குள் ஓடி சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் உள்ள அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததுடன், பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தது. பீரோவில் பொருட்கள் இருக்கிறதா? என ஆய்வு செய்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இவர்கள் வெளியூருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கரிகாலன் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஏ.டி.எஸ்.பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டிற்குள் சென்று அறைகள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்ப நாய் பைரவாவும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து, சிறிது தூரம் ஓடி விட்டு மீண்டும் திரும்பியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை அரங்கேற்றிய மர்மநபர்கள் யார்? என்பது குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மாநகரை ஓட்டியுள்ள போலீஸ் நிலையங்களிலேயே துடியலூர் போலீஸ் நிலையம் தான் பெரிய போலீஸ் நிலையம். அங்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இரவு ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தொடர் கொள்ளையை கட்டுப்படுத்த போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News