ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புஷ்ப யாகம் நடந்தபோது எடுத்தபடம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி வீதிஉலா

Published On 2019-11-05 04:54 GMT   |   Update On 2019-11-05 04:54 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 டன் மலர்கள் மற்றும் இலைகளால் புஷ்ப யாகம் நடந்தது. இரவு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாதம் சிரவண நட்சத்திரத்தையொட்டி புஷ்பயாகம் நடைபெறும். தற்போது தெலுங்கு கார்த்திகை மாதம் நடக்கிறது. சிரவண நட்சத்திர தினமான நேற்று கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை அங்குரார்ப்பணம் நடந்தது. அப்போது கோவிலின் மேற்கு மாடவீதியில் உள்ள வசந்த மண்டபத்தில் இருந்து புற்றுமண் எடுத்து வந்து, கோவிலில் பூஜை செய்யப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.

நேற்று கோவிலில் 2-வது அர்ச்சனை, 2-வது மணி ஒலித்ததும் மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. இதையடுத்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரம் அருகில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு, உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

இதையடுத்து புஷ்பங்கள் நிரப்பப்பட்ட மலர் கூடைகளை கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், பக்தர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணிவரை முல்லை, சாமந்தி, சம்பங்கி, தாமரை, செண்பகம், ரோஜா, தாழம்பூ, செம்பருத்தி, நத்தியாவட்டை, மல்லி, கனகாம்பரம் ஆகியவை உள்பட 14 வகையான மலர்களாலும் மற்றும் துளசி, தவனம், மரிக்கொழுந்து, வில்வம் உள்பட 6 வகையான இலைகளாலும் மொத்தம் சேர்த்து 8 டன் மலர்கள், இலைகளால் புஷ்ப யாகம் (புஷ்பார்ச்சனை) செய்யப்பட்டது.

கோவிலில் சகஸ்ர தீபலங்கார சேவை முடிந்ததும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, கோவில் துணை அதிகரி ஹரேந்திரநாத், பூங்கா இலாகா அதிகாரி சீனிவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புஷ்ப யாகத்தையொட்டி கோவிலில் வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News