செய்திகள்
கோப்புபடம்

கரூர் அருகே தேர்தல் பணியில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்: 12 பேர் மீது வழக்கு

Published On 2021-04-10 11:59 GMT   |   Update On 2021-04-10 11:59 GMT
கரூர் அருகே தேர்தல் பணியில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதிக் கொண்டனர். இது தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர்:

கரூர் அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சி காளிபாளையம் விநாயகர் கோவில் அருகே செல்ல பாளையம் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் முருகமணி (வயது 57) தலைமையில் அ.தி.மு.க.வினர் கடந்த 6-ந்தேதி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தி.மு.க.வை சேர்ந்த ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்லை சிவசாமி (43), தி.மு.க. கிளைச் செயலாளர் தங்கவேல் (55) உள்பட தி.மு.க.வினர் அங்கு வந்துள்ளனர்.

அப்போது திடீரென அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அ.தி.மு.க. கிளைச்செயலாளர் முருகமணி காயமடைந்தார். இதையடுத்து அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து முருகமணி வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ஊராட்சி மன்ற தலைவர் செல்லை சிவசாமி மற்றும் தங்கவேல், சுப்புராயன் (65), சுப்பிரமணி (60) தமிழ்செல்வன் (30) பொன்னுச்சாமி (35), சக்திவேல் (41) முத்துச்சாமி (65) ஆகிய 8 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், தி.மு.க. கிளை செயலாளர் தங்கவேல் வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், அ.தி.மு.க.வை சேர்ந்த முருகமணி, சீனிவாசன் (37), பொன்னுசாமி (47), பாலசுப்பிரமணி (30) ஆகிய 4 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News