செய்திகள்
கோப்புபடம்

ஜெயங்கொண்டம் அருகே கடையில் சில்லரை கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2020-09-15 15:17 GMT   |   Update On 2020-09-15 15:17 GMT
ஜெயங்கொண்டம் அருகே பெட்டிக்கடையில் சில்லரை கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். நெசவு தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி(வயது 60). இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்த வெங்கடேசன், கொரோனா பரவலை தொடர்ந்து, சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். தமிழரசி வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அறுபதாம் கல்யாணத்தின்போது அணிவிக்கப்பட்ட தாலியை, ஏற்கனவே அணிந்திருந்த சங்கிலியுடன் சேர்த்து சுமார் 6¼ பவுன் தாலிச்சங்கிலியை தமிழரசி கழுத்தில் அணிந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் தமிழரசி பெட்டிக்கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர், வண்டியை தூரத்தில் நிறுத்திவிட்டு கடைக்கு நடந்து வந்து, தமிழரசியிடம் பணம் கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்ற அவர், மீண்டும் அந்த கடைக்கு வந்து தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் பத்து ரூபாய் நோட்டை கொடுத்து, 10 ஒரு ரூபாய் நாணயங்களை கொடுக்கும்படி தமிழரசியிடம் கேட்டுள்ளார்.

சில்லரையை எடுப்பதற்காக தமிழரசி குனிந்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை மர்மநபர் பறிக்க முயன்றார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட தமிழரசி, தாலியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் சங்கிலி அறுந்து, சுமார் 5 பவுன் சங்கிலி மர்ம நபரின் கையில் சிக்கியது. தாலியுடன் சேர்த்து சுமார் 1¼ பவுன் நகை தமிழரசியின் கையில் இருந்தது.

இதையடுத்து அந்த மர்மநபர் சங்கிலியுடன் அங்கிருந்து ஓடினார். இதனால் தமிழரசி திருடன்..., திருடன்... என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் அந்த மர்ம நபரை துரத்தி சென்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல், அவர் வந்த மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் தப்பிச்சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்தார். மூதாட்டியிடம் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்னதாக வாரியங்காவல் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் அந்த மர்ம நபர், தான் ஒரு அதிகாரி என்று கூறி புகையிலை பொருட்களை விற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது, அதனை மீறி ஏன் விற்பனை செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். பின்னர் ஒரு சீட்டில் குறிப்பெடுத்து கொண்டு நாளை நோட்டீஸ் ஒன்று வரும். ரூ.5 ஆயிரம் அபராதம் கட்ட நேரிடும் என கூறி பணம் பறிக்க முயன்றதாகவும், அப்போது கடையில் இருந்த விஜயா, தனது மகனுக்கு போன் செய்வதாக கூறியவுடன், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பட்டப்பகலில் கடையில் இருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News