செய்திகள்
கோப்புப்படம்

நோயாளிகளின் உறவினர்களை ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்கி வர வற்புறுத்தக்கூடாது - மத்திய அரசு

Published On 2021-06-07 22:58 GMT   |   Update On 2021-06-07 22:58 GMT
ரெம்டெசிவிர் மருந்து விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையை கடைப்பிடிக்குமாறு டாக்டர்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ரெம்டெசிவிர்மருந்து முக்கிய இடம் பிடித்து உள்ளது. ஆனால் இந்த மருந்து தொடர்பாக பல்வேறு மோசடிகள் அரங்கேறுவதுடன், நோயாளிகளின் உறவினர்களும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரெம்டெசிவிர்மருந்து தொடர்பாக மத்திய அரசு நேற்று பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக இந்த மருந்து விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையை கடைப்பிடிக்குமாறு டாக்டர்களை அரசு கேட்டுள்ளது.

முக்கியமாக ரெம்டெசிவிர் மருந்தை ஆஸ்பத்திரிகளே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் எனவும், அவற்றை சில்லறை கடைகளில் இருந்து வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினர்களை வற்புறுத்தக்கூடாது எனக்கூறியுள்ளது.

மேலும் ரெம்டெசிவிர் மருந்து பயன்பாடு தொடர்பாக ஆஸ்பத்திரிகளில் சிறப்பு மருந்து கமிட்டி அமைக்க வேண்டும் எனவும், அந்த குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

இதைப்போல நோயாளிகளுடன் சிகிச்சையில் நேரடியாக ஈடுபடும் மூத்த மருத்துவ அதிகாரி மட்டுமே இந்த மருந்தை பரிந்துரைக்க வேண்டும் எனக்கூறியுள்ள மத்திய அரசு, அவர் இல்லாத நேரத்தில் பணியில் இருக்கும் டாக்டர்கள் இது குறித்து மூத்த அதிகாரியின் அறிவுரையின்பேரில் எழுத்துப்பூர்வமாகவே அது குறித்த பரிந்துரையை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு தனது அறிவுறுத்தலில் கூறியுள்ளது.
Tags:    

Similar News