ஆன்மிகம்
கபிஸ்தலம் கஜேந்திர வரதப்பெருமாள்,

விரைந்து நம்மை காக்கும் கபிஸ்தலம் கஜேந்திர வரதப்பெருமாள்,

Published On 2020-09-24 08:28 GMT   |   Update On 2020-09-24 08:28 GMT
கபிஸ்தலத்தில் திருமால் கஜேந்திர வரதப் பெருமாள், ஆதிமூலப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
கபிஸ்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம் திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருமால் கருணையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான கஜேந்திர மோட்சம் இத்தலத்தில் நிகழ்ந்தது. ஆஞ்சநேயருக்கு அருள் வழங்கிய தலமாதலால் இது கபிஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

துர்வாசரின் சாபத்தால் இந்திரஜ்யும்னன் என்ற திருமால் பக்தன் காட்டு யானைகளின் தலைவனான கஜேந்திரனாகப் பிறந்தான். எனினும் திருமாலின் மீது கொண்ட பற்றினால் தினமும் தாமரை கொண்டு வழிபட்டு வந்தான். அகத்தியரின் சாபத்தால் கூஹூ என்ற அசுரன் முதலையாக குளத்தில் வசித்தான். ஒருநாள் திருமால் வழிபாட்டிற்காக தாமரையை மலரை எடுக்க கஜேந்திரன் யானை கூஹூ அசுரன் இருந்த குளத்தில் இறக்கினான். கஜேந்திரன் யானையின் காலை கூஹூ முதலை பற்றி இழுத்தது. கஜேந்திரன் யானை வலியால் “ஆதிமூலமே காப்பாற்று” என்று கதறியது.

திருமாலும் விரைந்து வந்து சக்ராயுதத்தால் கூஹூவை வதம் செய்து கஜேந்திரனைக் காப்பாற்றி இருவருக்கும் மோட்சம் அளித்தார். இங்கு திருமால் கஜேந்திர வரதப் பெருமாள், ஆதிமூலப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 9-வது திவ்ய தேசமாகும்.

ஆடி பௌர்ணமியில் இங்கு கஜேந்திர மோட்ச லீலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இத்தல பெருமாளை உள்ளன்புடன் “ஆதிமூலமே” என்று அழைத்தால் திருமால் விரைந்து நம்மைக் காப்பார் என்று கூறப்படுகிறது. நோய், கடன், வறுமை ஆகியவற்றை இத்தல இறைவனை வழிபட நீங்கும்.
Tags:    

Similar News