செய்திகள்
இமயமலை பனிப்பாறை

இமயமலை பனிப்பாறைகளின் ஆழத்தை அளவிட நடவடிக்கை

Published On 2020-12-20 19:23 GMT   |   Update On 2020-12-20 19:23 GMT
இமயமலை பனிப்பாறை கள் மூலம் எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பதை அறிவதற்கு, அந்த பனிப்பாறைகளை அளவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதுடெல்லி:

இமயமலையில் ஏராளமான பனிப்பாறைகள் உள்ளன. இந்த பனிப்பாறைகள் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகின்றன.

இமயமலையில் உள்ள செனாப் ஆற்றின் துணை நதி சந்திரா நதி ஆகும். செனாப் நதி, சிந்துவின் துணை நதி. அங்கிருந்து தோன்றும் ஆறுகளுக்கு இமயமலை பனிப்பாறைகள்தான் முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும்.

இமயமலை நதிகள் இந்தோ- கங்கை சமவெளிகளில் வாழ்கிற லட்சோப லட்சம் மக்களுக்கு உயிர்நாடியாக உள்ளன.

இந்த நிலையில், இமயமலையில் உள்ள பனிப்பாறைகளின் ஆழத்தையும், அவற்றில் கிடைக்கும் தண்ணீர் அளவையும் அளவிடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக மத்திய பூமி அறிவியல் அமைச்சகம் களம் இறங்கி உள்ளது.

இந்த பணிகள் அடுத்து வரும் கோடைகாலத்தில், குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கும் என்று மத்திய பூமி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ராஜீவன் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு தேசிய துருவம் மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

சந்திரா நதிப்படுகையில் உள்ள 7 பனிப்பாறைகளை முதலில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பனிப்பாறைகளின் பரப்பளவு, ஏற்கனவே செயற்கைக்கோள்களின் உதவியுடன் அறியப்பட்டாலும், பனிப்பாறைகளின் ஆழத்தை அறிய வேண்டியதின் நோக்கம், அவற்றின் அளவை புரிந்துகொள்வதாகும். இது தண்ணீர் கிடைக்கும் தன்மையையும், பனிப்பாறைகள் அதிகரிக்கின்றனவா, சுருங்குகின்றனவா என்பதை புரிந்துகொள்ளவும் உதவும்.

இதற்காக மைக்ரோவேவ் சிக்னல்களை கொண்ட ரேடார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போகிறோம். இதனால் பனிக்கட்டிகளின் வழியே ஊடுருவி பாறைகளை அடைய முடியும். மைக்ரோவேவ் சிக்னல்கள் பனிப்பாறையில் பிரதிபலிக்கிறபோது, அதன் ஆழத்தை புரிந்துகொள்ள முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்காவும், இங்கிலாந்தும் பயன்படுத்துகின்றன. எனவே அந்த தொழில்நுட்பத்தை நாங்களும் பயன்படுத்தப்போகிறோம். முதலில் ரேடார்களை கொண்டு செல்வதற்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தப்போகிறோம். இது வெற்றி கண்டவுடன் இமயமலையின் பிற பகுதிகளிலும் அடுத்தடுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பின்னர் மற்ற பனிப்பாறைகளை ஆராய விமானம் அல்லது ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) பயன்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News