செய்திகள்
இல கணேசன்

தமிழகத்தில் அதிமுக-பா.ஜனதா கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: இல.கணேசன்

Published On 2021-02-12 04:22 GMT   |   Update On 2021-02-12 04:22 GMT
‘தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்’ என்று இல.கணேசன் கூறினார்.
தூத்துக்குடி:

பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜனதா கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை முறைப்படி இன்று (நேற்று) தொடங்கி உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக ஆய்வுக்கூட்டங்களும் தொடங்கப்பட்டு உள்ளன. எனக்கு 14 சட்டமன்ற தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் முதலாவதாக தூத்துக்குடி தொகுதியில் ஆலோசனை நடத்தி உள்ளேன். அடுத்ததாக நாங்குநேரி தொகுதிக்கு செல்கிறேன்.

தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் யார், யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது? என்பது குறித்து பின்னர் பேசி முடிவு செய்யப்படும். அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.

அ.தி.மு.க., சசிகலா பிரச்சினையில் பா.ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது அவர்களுக்கு இடையிலான பிரச்சினை. அவர்கள் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். ஆனால் அதில் சில பிரச்சினைகள் இருப்பதாக அ.தி.மு.க. தரப்பில் கூறுகின்றனர். சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் ஆளுகைக்கு வந்து விடுவார்கள். இதனால் குடும்ப ஆட்சி என்ற முத்திரை அ.தி.மு.க. மீது குத்தப்பட்டு விடும். அதனை அ.தி.மு.க விரும்பவில்லை. இப்படி பல பிரச்சினைகள் இருக்கிறது. இதனை நாங்கள் தீர்த்து வைப்பது பொருத்தமல்ல.

பிரதமர் மோடி நாடு முழுவதும் மக்களுக்கு செய்து வரும் நன்மைகள் மற்றும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி பலம் நிச்சயம் வெற்றியை தரும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் தொடரும்.

கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட தி.மு.க. தற்போது வேல் வாங்குவது, ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாது. தி.மு.க.வை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News