செய்திகள்
தடுப்பூசி போட கற்களை அடையாளமாக வைத்த பெண்

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி போட இரவு முதலே திரண்ட பொதுமக்கள்

Published On 2021-06-19 08:49 GMT   |   Update On 2021-06-19 08:49 GMT
ஈரோடு மாவட்டத்தில் இன்று 67 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 7 நாட்கள் தடுப்பூசி போடப்படவில்லை. இதையடுத்து கடந்த 13, 14-ந் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. 2 நாட்களில் தடுப்பூசி தீர்ந்து விட்டது.

இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 15-ந் தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 16-ந் தேதி 15 ஆயிரத்து 600 கோவிஷீல்டு, 4 ஆயிரம் கோவேக்சின் என மொத்தம் 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்தன.

அன்றைய தினமே புறநகர் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்திருந்தனர். ஆனால் மாநகர பகுதியில் தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. 17-ந்தேதி ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று மாநகரில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் புறநகர் பகுதியில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று 67 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு நேற்று இரவு முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிய தொடங்கினர்.

இந்நிலையில் தடுப்பூசி போடும் மையமான வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு திரண்ட மக்கள் தாங்களாகவே டோக்கன்கள் போட்டுக்கொண்டும், கற்கள், குடங்களை வரிசையில் வைத்தும் இடம் பிடித்து விடிய, விடிய காத்து நின்றனர்.

மாநகர் பகுதியில் 10 மையங்களில் வழக்கமாக ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால் இன்று 100 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதனால் இரவில் காத்து கிடந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கிடைத்தது. காலையில் வந்தவர்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆரம்பத்தில் தடுப்பூசியை கண்டு அச்சம் அடைந்த பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி போட திரண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News