செய்திகள்
இந்திய தேர்தல் ஆணையம்

தமிழக சட்டசபை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கிறது தேர்தல் கமி‌ஷன்

Published On 2021-02-19 08:16 GMT   |   Update On 2021-02-19 08:16 GMT
தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்பதால் இந்த மாத கடைசிக்குள் அரசு திட்டங்கள் அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக இந்திய தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்தார்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதியில் தேர்தல் நடத்தலாம் என்ற அட்டவணையை தேர்தல் கமி‌ஷனர் தயாரித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் கடைசி வாரம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளதால் எந்த தேதியில் தேர்தல் நடைபெறும் என்ற விவரத்தை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா டெல்லியில் அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்புக்கு விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்பதால் இந்த மாத கடைசிக்குள் அரசு திட்டங்கள் அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை முதல் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

சேலம் தலைவாசலில் ரூ.1000 கோடி செலவில் அமைக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியை வருகிற 22-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

27-ந்தேதி 218 போலீசாருக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பதக்கங்களை வழங்குகிறார்.

இதுதவிர தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப்பணிகளையும் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

முடிவுறும் தருவாயில் உள்ள பல்வேறு பாலங்கள், சாலைப் பணிகள், கட்டிடங்கள் ஆகியவற்றையும் இந்த மாத இறுதிக்குள் கட்டி முடித்து திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 14-ந்தேதி சென்னை வந்து மெட்ரோ ரெயில் விரிவாக்க தொடக்க விழா உள்பட பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

தற்போது மீண்டும் வருகிற 25-ந்தேதி புதுச்சேரி, கோவை வருகிறார். அப்போது கோவையில் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கீழ்பவானி கால்வாய்களை மேம்படுத்தும் திட்டம், புனரமைத்தல், நவீனப்படுத்துதல், ஆறுகள் இணைப்பு திட்டம் உள்பட ரூ.960 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இது தவிர மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பணிகளையும் இந்த மாதத்துக்குள் திறந்து வைக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Tags:    

Similar News