செய்திகள்
மாட்டு பொங்கலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாட்டு வண்டி ஓட்டி, அசத்தியபோது எடுத்தபடம்.

திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல- முக ஸ்டாலின் பேச்சு

Published On 2021-01-15 21:04 GMT   |   Update On 2021-01-15 21:04 GMT
“பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தி.மு.க. இந்துக்களுக்கு எதிரிபோல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பொங்கல் திருநாளை முன்னிட்டு, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடம், அவருடைய கோபாலபுரம் இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

மாலையில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட கோணாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அவர் பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். தை பிறந்துவிட்டது. வழிதான் பிறக்க வேண்டும்; பிறக்கத்தான் போகிறது. பிறந்தே தீரும். அது பிறக்கத்தான் நீங்கள் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறீர்கள்.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் திட்டமிட்டு தி.மு.க. ஏதோ இந்துக்களுக்கு எதிரிபோல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய துணைவியார் போகாத கோவிலே கிடையாது. தி.மு.க.வில் இருக்கக்கூடிய பல மாவட்ட செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். அந்த பக்தியை நாங்கள் குறைச்சொல்ல தயாராக இல்லை. அது அவர்களுடைய விருப்பம். என்னதான் திட்டமிட்டு சதிசெய்து தி.மு.க. மீது பழி சுமத்திக்கொண்டு இருந்தாலும், அவையெல்லாம் எடுபடாது என்பதை எதிர்வரும் தேர்தலில் தமிழக மக்கள் நிரூபித்துக்காட்டத்தான் போகிறார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க.வில் படிப்படியாக வளர்ந்தவன். 13 வயது மாணவனாக இருந்தபோது கோபாலபுரம் பகுதியில் முடிதிருத்தும் கடையில் இளைஞர் தி.மு.க. என்ற படிப்பகத்தைத் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, அதனை இளைஞா் அணி என்ற அமைப்பாக மாற்றி, அதன் பிறகு தி.மு.க.வின் துணை அமைப்பாக அது மாறியது.

இரண்டு முறை மக்களால் சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் இந்த அடியேன். அதற்கு முன்பு கவுன்சிலர்கள் இணைந்து மேயரைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். ஆனால், சென்னை மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களால் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இந்த அடியேன் ஸ்டாலின்.

முதன் முதலில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தி.மு.க. ஆட்சி இருந்தது. இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஜெயலலிதாவின் ஆட்சி. அப்போது அவர்கள் என்னை தோற்கடிப்பதற்காக எத்தனையோ திட்டமிட்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார்கள். அதனையெல்லாம் மீறி 2-வது முறையாக மேயராக வெற்றி பெற்றேன். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். தலைவர் கருணாநிதியின் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக, அதனைத் தொடர்ந்து துணை முதல்-அமைச்சராக, இப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி் தலைவராக பணியாற்றி வருகிறேன். இது மக்கள் பணி.

கட்சி பணி என்றால், இளைஞர் அணி செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், இன்றைக்கு உங்களில் ஒருவனாக இருந்து தலைவராக இருக்கக்கடிய பெரும் பொறுப்பை பெற்றிருக்கிறேன் என்றால், இதெல்லாம் வரலாறு.

ஏதோ வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் இதையெலலாம் சொன்னேன்; வேறல்ல.

இப்போது சொல்கிறேன். இன்னும் 4 மாதங்கள்தான். பொறுங்கள். 4 மாதங்களில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது. வந்தவுடன், விவசாயிகளினுடைய கூட்டுறவுக் கடன் அத்தனையும், எப்படி முதல்-அமைச்சர் கருணாநிதி ரத்து செய்தாரோ அதேபோல் ரத்து செய்யப்படும். அதேபோல் நகை கடன். குடும்பத்தின் சூழல் காரணமாக - வறுமையின் காரணமாக தாய்மார்கள் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கிகளில் வைத்திருக்கிறார்கள், இன்னும் மீட்க முடியவில்லை; வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. அதனால்தான் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது சொன்னேன். அதன்படி 5 சவரன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்வோம். அதனை இப்போது சட்டமன்ற தேர்தலின்போதும் சொல்கிறேன். இந்த வாக்குறுதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் காப்பாற்றப்படும் - நிறைவேற்றப்படும் என்று நேற்று சொன்னேன். அதேதான் இங்கேயும் சொல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News