செய்திகள்
அனுசுயா (சுடிதார் அணிந்திருப்பவர்) தனது மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதை படத்தில் காணலாம்.

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பட்டதாரி பெண்

Published On 2021-01-13 08:31 GMT   |   Update On 2021-01-13 08:31 GMT
2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் பட்டதாரி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:

கோவை மாவட்டம் பீளமேடு காந்தி நகரை சேர்ந்த பட்டதாரி பெண் அனுசுயா. இவர் தனது பெற்றோருடன் நேற்று மதியம் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடி கொண்டிருந்த அரசு அதிகாரிகள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை கலெக்டரின் கார் டிரைவர் செந்தில் என்பவர் பிடுங்கினார். இதை தொடர்ந்து அங்கு வந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் அனுசுயாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கும், விருதுநகர் மாவட்டம் பிச்சப்பத்தி மாங்குளம, வடக்கு வீதியை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவருக்கும் முகநூல் மூலம் காதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தின்போது ரூ.3 லட்சமும், புல்லட் வாகனமும், 5 பவுன் நகையும் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்தோம்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், எனது கணவர் மாரிச்செல்வத்துக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணை எனது கணவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து 2-வது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மாரிச்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வரதட்சணையாக கொடுத்த பணம், நகைகளை மீட்டுத்தரக்கோரியும் நேற்று முன்தினம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தேன். இந்த புகாரின் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் எனது பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றேன், எனது கணவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களிடம் இருந்து வாங்கிய நகை மற்றும் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அனுசுயாவிடம், அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் நாகை கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News