ஆன்மிகம்
விநாயகர்

இன்று சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்

Published On 2020-08-07 04:58 GMT   |   Update On 2020-08-07 04:58 GMT
சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும்.
வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.

சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி.  சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள  விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது.  மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம்.

பிரசாதமும் அளிக்கலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய   சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.  தேய்பிறை  செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும்.

எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி,  நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்று புராணங்கள் சொல்கின்றன. சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு இந்த விரதம் ஒரு நல்ல விடிவு என்றே சொல்லலாம். 
Tags:    

Similar News