ஆன்மிகம்
இயேசு

தெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக

Published On 2021-02-24 08:12 GMT   |   Update On 2021-02-24 08:12 GMT
தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் நம் ஒவ்வொருவடைய வீட்டிலும் இயேசு பிரவேசிக்க அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நாம் ஒவ்வொருவருக்கும் தெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக ஆமென்.
ஒருநாள் இயேசு எரிகோ என்னும் பட்டணத்திற்கு வந்தார். அவர் வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் மக்கள் கூட்டம் கடல் போல் திரண்டது. இந்த கூட்டத்தில் சகேயு என்னு பெயர் கொண்ட மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் ரோம பேரரசிற்காக மக்களிடம் வரி வசூலிக்கும் அரசாங்க வேலை செய்தவன். இவனுக்கு எல்லாம் நிறைவாய் இருந்தது. ஆனால் அவன் சொந்தநாட்டு மக்களே அவனை வெறுத்தனர். மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்ததே  அதற்கு காரணம்.

இயேசு குருடர், செவிடர், முடவர், குஷ்ட ரோகி யாவரையும் குணமாக்கியிருக்கிறார். மரிதோரையும் உயிரோடு எழுப்பியிருக்கிறார் என்று கேள்விபட்ட சகேயு இப்பேற்பட்ட பரிசுத்த தேவ குமாரனை எப்படியாவது காண வேண்டுமென்ற மிகுந்த ஆசையோடும், ஆவலோடும், அருகிலிருந்த காட்டத்தி மரத்தில் ஏறினான். சகேயு குள்ளாயிருந்தபடியால்  அப்படி செய்தான்.

இயேசு அந்த மரத்தின் கீழ் வந்தபோது சகேயுவே நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார். சகேயு உடனே கீழே இறங்கி மிகுந்த சந்தோஷமாய் இயேசுவை பார்த்து என் ஆதிகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன். ஒருவரிடத்தில்  அதிகமாய் எதையாகிலும் பெற்றிருந்தால் 4 மடங்காய் திருப்பி தருகிறேன் என்றான். அதற்கு இயேசு அவனிடம் இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்றார். இயேசு சகேயுவின் வீட்டிற்கு வந்ததும் பாவம் போனது. இரட்சிப்பு வந்தது. தெய்வீக சமாதான வீட்டை நிறைத்தது.

நாமும் நம் பாவம் நீங்கி, இரட்சிப்பு அடைந்து சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழ இயேசுவை நம் இல்லத்திலும் உள்ளத்திலும் தங்குவதற்று அழைப்போமா?

வெளிப்படுத்தல் 3-ம் அதிகாரம் 20-ம் வசனத்தில் இதோ வாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என்(இயேசு) சத்தத்தை கேட்டு கதவை திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடு போஜனம் பண்ணுவான் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் நம் ஒவ்வொருவடைய வீட்டிலும் இயேசு பிரவேசிக்க அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நாம் ஒவ்வொருவருக்கும் தெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக ஆமென்.

சகோதரி.ரூத்பிமோராஜ்,
கே.ஜி.கார்டன், திருப்பூர்.
Tags:    

Similar News