ஆன்மிகம்
கருப்பு எள்ளினால் ஆன அத்திவரதர் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

சென்னையில் பல்வேறு தோற்றங்களில் விநாயகர் சிலைகள்

Published On 2019-09-03 04:00 GMT   |   Update On 2019-09-03 04:00 GMT
சென்னையில் பல்வேறு தோற்றங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் கொழுக்கட்டை, பொங்கல் போன்ற பிரசாதமும் வழங்கப்பட்டன. களிமண் பிள்ளையாரை வாங்கி வீடுகளில் பூஜைகள் செய்தனர்.

கொழுக்கட்டை, சுண்டல் போன்ற பிள்ளையாருக்கு பிடித்தமான உணவு வகைகளை படையல் வைத்து வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி போலீசார் அனுமதியுடன் இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னையில் 2 ஆயிரத்து 642 சிலைகள் பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டன.

இந்து முன்னணி சார்பில் சென்னை கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகரில் 36 அடி உயரத்தில் பஞ்சமுக விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. 3 லட்சம் ருத்ராட்சம், 1,500 கிலோ சோளம், 500 கிலோ கரும்பு ஆகிவற்றை கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிலையை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

பஞ்சமுக விநாயகர் சிலையில் உள்ள ருத்ராட்சை வருகிற 8-ந்தேதி அன்று பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று விழா கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.

காஞ்சீபுரம் அத்திவரதர் வைபவம் பிரசித்தி பெற்றதால், இந்த ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் அத்திவரதர் விநாயகர் சிலைகள் புதிதாக வைக்கப்பட்டன. சென்னை எழும்பூரில் மிலிட்டரி விநாயகர், கொசப்பேட்டையில் குயவர் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளன.

கொளத்தூர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்டுதோறும் வித்தியாசமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 7 ஆயிரத்து 1 வலம்புரி சங்குகளை கொண்டு வலம்புரி விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.



இந்த சிலையின் உயரம் 33 அடி ஆகும். கொளத்தூர் லட்சுமி அம்மன் கோவில் அருகே நிறுவப்பட்டுள்ள வலம்புரி விநாயகர் சிலையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த சிலை நேற்று மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டபோது, அங்கு பொதுமக்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வலம்புரி விநாயகர் சிலையை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செல்போனில் படம் பிடித்தனர்.

சிலையில் உள்ள வலம்புரி சங்குகள் பக்தர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று கொளத்தூர் நண்பர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

பெரவள்ளூர் ராம் நகர் நண்பர் குழு சார்பில் 13 அடி உயரத்தில் 300 கிலோ நவதானியங்களை பயன்படுத்தி நவதானிய விநாயகர் சிலை அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் சற்று தொலைவில் சிவசேனா சார்பில் 2 ஆயிரத்து 500 கிலோ சோற்று கற்றாழை, 100 கிலோ சோளம் ஆகியவற்றை கொண்டு 31 அடி உயரத்தில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் நெற்றியில் நாமம் இடப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு ‘அத்திவரதர் விநாயகர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் இந்து முன்னணி சார்பில் புல்லட்டில் அமர்ந்து விநாயகர் செல்வது போன்று சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் விநாயகர் சிலை அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

புல்லட் விநாயகர் சிலை முன்பு பலர் ஆர்வத்துடன் ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர். அல்லிக்கேணி ராஜா, குப்பத்து ராஜா, மார்க்கெட் ராஜா, செக்மோடு ராஜா என்று வித்தியாசமான பெயர்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 5, 7 மற்றும் 8 ஆகிய 3 நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News