ஆன்மிகம்
புனிதநீர் நிரப்பப்பட்ட தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த காட்சி.

திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு- சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி

Published On 2020-10-25 01:41 GMT   |   Update On 2020-10-25 01:41 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று புனிதநீர் நிரப்பப்பட்ட தொட்டியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கும். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா, வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஆகிய இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடந்தது.

நவராத்திரி பிரம்மோற்சவ விழா 16-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை, இரவு இருவேளை பல்வேறு வாகன சேவை நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை பல்லக்கு உற்சவம் நடந்தது.

அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

பின்னர் கோவில் உள்ளே புனிதநீர் நிரப்பப்பட்ட தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பிரதான அர்ச்சகர்கள் உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாரை புனிதநீர் நிரப்பப்பட்ட தொட்டியில் 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர். இரவு தங்கத் திருச்சி வாகன சேவையுடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
Tags:    

Similar News