ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை நடத்த அனுமதிக்க கோரிக்கை

Published On 2021-04-16 02:51 GMT   |   Update On 2021-04-16 02:51 GMT
தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேர் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் :

இந்து முன்னணி பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசான சிவம் தலைமையில் மாநகர தலைவர் சதீஷ், ஒரத்தநாடு மணிகண்டன், வல்லம் நகர பொறுப்பாளர்கள் வினோத், சதீஸ்குமார், நாகராஜ், நகர செயலாளர் லட்சுமணன் மற்றும் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று சித்திரைப் பெருவிழா. கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக சித்திரை பெருவிழா நடைபெறவில்லை.‌ எனவே இந்த ஆண்டு பெரிய கோவில் திருத்தேர் திருவிழாவை ஆகமவிதிப்படி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு​ நடத்த வேண்டும்.

பொதுவாக மக்கள் கூடும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் திறந்து இருக்கிறது. பெரும்பான்மை இந்து மக்களின் வழிபாட்டு உரிமையான தேர்த்திருவிழாவிற்கு மட்டும் தடைவிதிப்பது பெரும்பான்மை மக்களின் மனம் புண்படும் செயலாகவே உள்ளது.

அதுமட்டுமின்றி இந்த சித்திரை திருவிழாக்கள் முறைப்படி நடைபெறாததால் நாட்டில் நோய் தொற்று, இயற்கை சீற்றம் உருவாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அதோடு மட்டுமல்லாமல் இந்த திருவிழாவை நம்பி வாழும் சிற்றுண்டி தயாரிப்பாளர்கள், கை வினைகலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் சிரமப்படும் உள்ளது. எனவே கலெக்டர் தேர் திருவிழாவை சமூக இடைவெளியுடன் நடத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News