செய்திகள்
ராஜா பரமசிவம்

புதுக்கோட்டை தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி. ராஜா பரமசிவம் திடீர் மரணம்

Published On 2019-05-14 05:37 GMT   |   Update On 2019-05-14 05:37 GMT
புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று மரணம் அடைந்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த இவர் பி.எஸ்சி.பி.எல். படித்து வக்கீல் தொழில் செய்து வந்தார்.

மேலும் புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியாக இருந்த போது அத்தொகுதியில் 1999 முதல் 2000 வரை அ.தி.முக. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்து வந்தார். புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.

2000-வது ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது எம்.பி.யாக பணியாற்றி வந்த அவர் ஆட்சி கலைக்கப்பட்டதால் தனது பதவியை இழந்தார். 11 மாதங்கள் மட்டுமே அவர் எம்.பி.யாக இருந்தார். இதற்கிடையே அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருநாவுக்கரசர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த பதவியை ராஜினாமா செய்தார். எனவே 2000-வது ஆண்டில் நடந்த அறந்தாங்கி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்

அதன் பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். ஆனால் தி.மு.க.வில் எந்த பதவியும் கிடைக்காததால் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து கட்சி பணியாற்றினார். இதனிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ராஜா பரமசிவம் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராஜா பரமசிவத்தின் உடல் அவரது சொந்த ஊரான நெடுவாசலில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அவரது உடல் சென்னையில் இருந்து நெடுவாசலுக்கு கொண்டு வரப்படுகிறது. ராஜா பரமசிவத்துக்கு சுசிலா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
Tags:    

Similar News