செய்திகள்
மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டபோது எடுத்த படம்.

மதுரை புறநகரில் திருட்டுபோன 57 செல்போன்கள் மீட்பு

Published On 2020-10-22 06:47 GMT   |   Update On 2020-10-22 06:47 GMT
மதுரை புறநகர் பகுதிகளில் திருட்டு போன 57 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை:

மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் போலீஸ் சைபர் கிளப் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பில் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட குழுவினர் உள்ளனர். மதுரை மாவட்ட போலீஸ் நிலையங்களில் பதிவான செல்போன் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்கள் குறித்த வழக்குகள் பற்றி இந்த அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி கண்டுபிடிக்கின்றனர். அதன்படி கடந்த 3 மாதங்களில் போலீஸ் சைபர் கிளப் மூலம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான 57 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அனைத்தும் அந்தந்த உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், மதுரை மாவட்டத்தில் இதுவரை 31 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 266 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்து கொண்டு நூதன முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் இதுவரை ரூ.7 லட்சத்து 15 ஆயிரம் மீட்கப்பட்டு அவரவர்களின் வங்கி கணக்கில் திரும்ப கிடைக்குமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று மோசடியாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், முன்பின் தெரியாத நபர்களிடம் வங்கி தொடர்பான எந்த வித தகவல்களையும் தெரிவிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News