உள்ளூர் செய்திகள்
பெருமாள் நகர் சாலையில் காலி மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடக்கும் காட்சி.

திறந்தவெளி பாராக மாறிய பெருமாள் நகர்

Published On 2022-04-16 04:58 GMT   |   Update On 2022-04-16 04:58 GMT
சேதராப்பட்டு அருகே திறந்தவெளி பாராக மாறிய பெருமாள் நகரில் சாலையில் காலி மது பாட்டில்களை உடைத்து சமூக விரோதிகள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:

சேதராப்பட்டு-திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு செல்லும் சாலையில் தமிழக பகுதியான பெருமாள் நகரில் குடியிருப்புகள் மற்றும் சிறிய தொழிற் சாலைகள் உள்ளது. 

இந்த பகுதியில் சேதராப்பட்டு தொழிற்-சாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே தங்கி உள்ளனர். 

பெருமாள் நகரில் 5-க்கும் மேற்பட்ட குறுக்கு சிமெண்டு சாலைகள் உள்ளது. இந்தப் பகுதியில் மாலை 7 மணிக்கு மேல் இரவு 12 மணி வரை தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது. 

சேதராப்பட்டில் பணி முடித்துவிட்டு அந்த வழியாகத்தான் பெண்கள் பாப்பான்சாவடி, ஆகாசம்பட்டு ஆகிய ஊர்களுக்கு செல்கிறார்கள். 

இதனால் அங்கு மது அருந்துபவர்களால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மது அருந்துபவர்கள் காலி மது பாட்டிலை சாலையிலேயே உடைத்து போடுகின்றனர். 

இதனால் அங்கு செல்லும் கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. போலீசார் கண்காணிப்பில் இல்லாத இந்த பகுதி என்பதால் மது மட்டுமல்லாமல் இளைஞர்கள் கஞ்சாவை புகைப்பதாகவும், போதை ஏறிய பின்னர் பலர் பிரச்சினைகள் செய்துகொள்வதும், மோதிக் கொள்வது என சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதனால்  அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் அந்த வழியாக வரும் வட மாநிலத் தொழிலாளர்களை  சிலர் போதையில் தகாத வார்த்தையால் பேசுவதும் நடந்து வருகிறது. 

எனவே ஆரோவில் மற்றும் வானூர் போலீசார் இரவு நேர ரோந்து பணியினை அந்த வழியாக தினமும் மேற்கொண்டால் அங்கு மது அருந்துபவர்கள் எண்ணிக்கை குறைவதோடு   அந்த பகுதியில் அசம்பா-விதங்கள் ஏதும் நடக்காத வண்ணம் தடுக்க முடியும் என பொதுமக்களும், தனியார் தொழிற்சாலை உரிமையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News