செய்திகள்
கோப்புபடம்

குடிபோதையில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை - சிறுவன் உள்பட 2 பேர் கைது

Published On 2020-12-01 13:50 GMT   |   Update On 2020-12-01 13:50 GMT
வாழப்பாடி அருகே குடிபோதையில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி:

வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு அடியில், தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்மணி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றினர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவின் பேரில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தவர் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 25) என்பதும், இவர் வாழப்பாடி எழில் நகர் பகுதியில் தனியார் பால் ஏஜென்ட் கடை நடத்தி வரும் உறவினர் வசந்தகுமார் என்பவரது வீட்டில் தங்கி, கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் வினியோகம் செய்து வந்ததும், அவர் எரித்து கொல்லப்பட்டதும் தெரியவந்தது.

இதனிடையே அவரை தீ வைத்து எரித்து கொன்றதாக வாழப்பாடி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கொத்தனார் திருமலை (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேர் நேற்று காலை முத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியிடம் சரண் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைதான திருமலை போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனக்கும், சக்திவேலுக்கும் ஒன்றாக மது அருந்தும் பழக்கம் உள்ளது. சக்திவேல் மது போதையில் தொடர்ந்து எனது தாயையும், குடும்பத்தாரையும் அவதூறாக பேசி வந்தான். இதனால் ஆத்திரத்தில் அவனை கொலை செய்யும் நோக்கத்துடன் கடந்த 27-ந் தேதி மது குடிக்க அழைத்துச் சென்றேன். சக்திவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் மது அருந்தினேன். அப்போது வழக்கம்போல சக்திவேல் எனது குடும்பத்தாரை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசினான்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவனுடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டேன். மேலும் அங்கிருந்த கல்லால் சக்திவேலை தாக்கினேன். இதில் அவன் இறந்து விட்டான். பிறகு சக்திவேல் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து சென்று நானும், சிறுவனும் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், பெட்ரோல் வாங்கி வந்து சக்திவேல் உடலுக்கு தீ வைத்துவிட்டு சேலத்தில் தலைமறைவானோம். ஆனால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் சரண் அடைந்தோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் கைது செய்யப்பட்ட திருமலை சேலம் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் அரசு காப்பகத்திலும் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News