செய்திகள்
நிர்மலா சீதாராமன்

பாராளுமன்றத்தில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 74 சதவீதமாக உயர்த்தும் மசோதா நிறைவேறியது

Published On 2021-03-23 00:00 GMT   |   Update On 2021-03-23 00:00 GMT
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 74 சதவீதமாக உயர்த்தும் மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது.
புதுடெல்லி:

காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தும் காப்பீட்டு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதா, கடந்த வாரம் பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறியது.

இந்நிலையில், இந்த மசோதாவை மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு கடந்த 2015-ம் ஆண்டு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அன்னிய முதலீடு பெருகியது. ரூ.26 ஆயிரம் கோடி அன்னிய முதலீடு வந்தது.

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசே நிதி கொடுத்து விடுகிறது. ஆனால், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சொந்தமாக நிதி திரட்ட வேண்டி உள்ளது. அந்த நிறுவனங்கள் திவால் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றன. வளர்ச்சி மூலதனம் கிடைக்காவிட்டால் சிக்கலாகி விடுகிறது. அதை தவிர்க்க அன்னிய முதலீட்டு உச்சவரம்பை உயர்த்த வேண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பும் காப்பீட்டு நிறுவனங்களின் கஷ்டங்களை அதிகரித்துள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையுடன்தான் அன்னிய முதலீடு உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதன்பின், மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி, பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை உயர்த்துவதை எதிர்த்ததாக குற்றம் சாட்டினார்.

விவாதம் முடிந்த பிறகு மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதா நிறைவேறியது. ஏற்கனவே மாநிலங்களவையிலும் நிறைவேறி இருப்பதால், இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்று விட்டது.
Tags:    

Similar News