செய்திகள்
புதுவை மோகன் நகரில் வீடுகளை சூழ்ந்திருக்கும் மழைநீர்.

புதுவையில் கொட்டித்தீர்த்த கனமழை- ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது

Published On 2021-11-29 02:56 GMT   |   Update On 2021-11-29 02:56 GMT
புதுச்சேரியில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வங்கக்கடலில் அடிக்கடி உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுவையில் உள்ள முக்கிய ஏரிகளான ஊசுடு, பாகூர், கனகன், வேல்ராம்பட்டு ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

கனமழை காரணமாக ஏற்கனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஓரிரு நாட்கள் மழையின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவையில் இன்று (திங்கட்கிழமை) வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி நேற்று முன்தினம் மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது. அதாவது நேற்று முன்தினம் காலை 8.30 மணிமுதல் நேற்று காலை 8.30 மணிவரை 31.8 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை 10 மணிக்கு மேல் நிலைமை தலைகீழாக மாறியது.

அதாவது காலை 10 மணிமுதல் மழை வெளுத்து வாங்கியது. புதுச்சேரி நகரம், பாகூர், அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, சேதராப்பட்டு, காலாப்பட்டு பகுதியில் மாலை வரை இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்தது.

இந்த மழை காரணமாக புதுச்சேரி நகரப்பகுதி, கிராமப்பகுதி என அனைத்து பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தாழ்வான சாலைகள், வீதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் வாய்க்கால் அடைப்பு காரணமாக மழைநீர் வடிய வழியில்லாமல் குளம்போல் தேங்கி நின்றது.

இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, 100 அடி ரோடு, சிவாஜி சிலை, மரப்பாலம், காமராஜ் சாலை, 45 அடி ரோடு, புஸ்சி வீதி, அம்பேத்கர் சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீர் 2 அடிக்கும் மேல் தேங்கியது.

அந்த இடங்களில் இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களால் செல்ல முடியவில்லை. இருப்பினும் அந்த வழியாக சென்ற வாகனங்கள் சில மழைவெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே பழுதாகி நின்றதை காண முடிந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் அதனை தள்ளி சென்றனர்.

புதுச்சேரி ஒயிட் டவுண் பகுதி உள்ள மழைநீரானது பெரிய வாய்க்கால் வழியாக கடலுக்குள் சென்று சேறும். ஆனால் நேற்று பெய்த கனமழையால் ஒயிட் டவுண் பகுதியும் தப்பவில்லை. வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் மழைவெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

அதுமட்டுமின்றி பெரிய வாய்க்காலில் செல்லும் தண்ணீரானது வாய்க்கால் நிரம்பி ரோட்டில் ஏறி ஓடியது. இதனால் ரோடுகளில் சில இடங்களில் சுமார் 1 அடி உயரம் வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழை காரணமாக புதுவை நகரின் தாழ்வான பகுதிகளான பாவாணர் நகர், நடேசன் நகர், செல்லம்பாப்பு நகர், ரெயின்போநகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். மேலும் பல்வேறு நகர் பகுதிகளை சுற்றிலும் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் மதியம், இரவு உணவு வழங்கப்பட்டது.

தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் பொதுப்பணி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதாலும், கனமழை காரணமாகவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக தவிர வேறு எந்த வேலைக்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.

இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News