இந்தியா
அகிலேஷ் யாதவ், சந்திரசேகர் ஆசாத்

அகிலேஷ் யாதவிற்கு தலித் நலன்கள் முக்கியமில்லை- ‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திரசேகர் ஆசாத்

Published On 2022-01-15 06:51 GMT   |   Update On 2022-01-15 09:24 GMT
சந்திரசேகர் ஆசாத், சமாஜ்வாதி கட்சியிடம் கூட்டணி வைப்பதற்கு 10 இடங்கள் கேட்டதாகவும், அகிலேஷ் யாதவ் 3 இடங்கள் மட்டுமே தருவதற்கு சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே பா.ஜ.கவில் இருந்த இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் முக்கிய தலைவர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி ஆகியோர் அக்கட்சியில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.

இதையடுத்து அக்கட்சிக்கு பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக தலித்துகளின் வாக்குகளையும் பெறுவதற்கு அகிலேஷ் யாதவ் முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைப்பது சாத்தியமில்லை என 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் என்னுடைய ஆசாத் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு தலித்துகளின் நலன் முக்கியமில்லை. அகிலேஷ் யாதவ் நம்மை அவமானப்படுத்திவிட்டார். ஆனால் தலித்துகளின் ஓட்டுக்கள் மட்டும் அவருக்கு தேவையாக இருக்கிறது.’ என தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர் ஆசாத், சமாஜ்வாதி கட்சியிடம் கூட்டணி வைப்பதற்கு 10 இடங்கள் கேட்டதாகவும், அகிலேஷ் யாதவ் 3 இடங்கள் மட்டுமே தருவதற்கு சம்மதித்ததாகவும் இதனால் இருவருக்கும் இடையில் பிளவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News