உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் களை கட்ட தொடங்கிய தேர்தல் திருவிழா

Published On 2022-01-29 06:28 GMT   |   Update On 2022-01-29 06:28 GMT
உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்க 22 தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்;

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 5 ஆண்டுகளாக  தனி அலுவலர்கள் பொறுப்பில் இயங்கின. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்  உள்ளாட்சிகளை ஆட்சி செய்ய இருக்கின்றன. மாநகராட்சியில் 60 வார்டு, 6 நகராட்சிகளில் 147 வார்டுகள், 15 பேரூராட்சிகளில் 233 வார்டுகள் என 440 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்க 22 தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக 65 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் மைய அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் நடக்க உள்ளது. 6 நகராட்சிகளிலும் நகராட்சி அலுவலகத்திலும், அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களிலும் மனுத்தாக்கல் நடக்கிறது.

 வேட்புமனு படிவத்தை (படிவம் -3) பெற்று, பூர்த்தி செய்து 20 ரூபாய் முத்திரைத்தாளில் தயாரிக்கப்பட்ட உறுதிமொழி படிவத்துடன் (படிவம் -3ஏ) மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர் அல்லது முன்மொழிபவர், வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். மனுவில்  இருவரும் கட்டாயம்  கையொப்பமிட வேண்டும்.

வேட்புமனு தாக்கல் நடக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் வேட்பாளரின் இரு வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும். வேட்புமனு தாக்கல் நடக்கும் அறைக்குள் வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் இடம்பெற்றுள்ள 21 வயது பூர்த்தியான வாக்காளர் அதே ஊராட்சியின் எந்த வார்டிலும் போட்டியிடலாம். போட்டியிடும் வார்டின் வாக்காளர் ஒருவர் முன்மொழிய வேண்டும். ஒரு வாக்காளர், ஒரு வேட்பாளருக்கு மட்டுமே முன்மொழிவு செய்ய முடியும்.

மாநகராட்சி வார்டுக்கு ரூ.4000, நகராட்சிக்கு ரூ.2000, பேரூராட்சி வார்டுக்கு ரூ.1000 என ‘டிபாசிட் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., வேட்பாளர்  இதில் 50 சதவீதத்தை மட்டுமே, டிபாசிட்’டாக செலுத்தலாம். வேட்புமனு படிவம் தயாரானதும்  ‘டிபாசிட்’ தொகை செலுத்தி அதற்கான அத்தாட்சி ரசீது இருந்தால் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் பதிவு செய்த கட்சி வேட்பாளர்கள், படிவம் ‘சி’ வாயிலாக, தாங்கள் எந்த கட்சி சார்பில் போட்டியிடுகிறோம் என்ற அங்கீகார படிவத்தை அளிக்க வேண்டும். 

சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கலின் போது வழங்கப்படும் 30 வகையான சின்னங்களில் இருந்து 3  சின்னங்களை தேர்வு செய்து  வேட்புமனுதாக்கல் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:

மாநகராட்சி மொத்த வார்டுகள் - 60. இதில் ரிசர்வ் பொது வார்டுகளாக 36 மற்றும் 59 ஆகிய புதிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் புதிய வார்டு 36 என்பது பழைய வார்டு அடிப்படையில் 46 மற்றும் 48 ஆகிய வார்டுகளின் சில பகுதிகள் உள்ளடக்கியது.

புதிய 59வது வார்டு என்பது பழைய வார்டுகள் 36 மற்றும் 37 ஆகியவற்றின் பகுதிகள் அடங்கியவை ஆகும். மேலும் ரிசர்வ் பெண் வேட்பாளர்களுக்கு புதிய வார்டுகளான 39 மற்றும் 47 ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 39வது வார்டு பழைய 59 மற்றும் 60 ஆகிய வார்டுகளின் பகுதிகள். 

புதிய 47வது வார்டு முந்தைய 35வது வார்டு முழுமையாகவும் 38வது வார்டில் சில பகுதிகளையும் கொண்டது. இது தவிர பெண்கள் வார்டுகளாக, 1,2,3, 5, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 19, 21, 23, 30, 33, 38, 40, 45, 48, 50, 53, 55, 57,58 மற்றும் 60 ஆகிய 28 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள 28 வார்டுகள் பொது வேட்பாளர்கள் வார்டுகளாக உள்ளன.

கூட்டணிகள் கட்சிகள் தங்களுக்கான வார்டு பங்கீடு பேசி முடிக்கும் முன்பாக அரசியல் கட்சிகள் தங்களுக்கு ‘செல்வாக்கு’ள்ள வார்டுகளில் தற்போதே பிரசாரத்தை துவக்கியுள்ளனர். 

மனுதாக்கல் தொடங்கியுள்ள  நிலையில், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் யாருக்கு எந்த வார்டை ஒதுக்குவது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. திருப்பூரில் தங்கள் வார்டு இதுவென உறுதி செய்யும் முன்பே கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியினரான தி.மு.க., அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
Tags:    

Similar News