செய்திகள்
மணலி எஸ்டேட் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்

கடலூரில் 91 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் பெய்த கனமழை

Published On 2021-02-22 03:27 GMT   |   Update On 2021-02-22 03:27 GMT
91 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் கடலூரில் நேற்று ஒரே நாளில் 19 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது.
கடலூர்:

வளி மண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் கன மழை பெய்தது. கடலூரில் மிக கன மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை கடலூரில் வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் பெய்த மழையானது புதிய வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளது. கடலூரில் இன்று (நேற்று) காலை 8.30 மணி வரை பெய்த மழை 19 சென்டி மீட்டர் பதிவாகி உள்ளது. கடந்த 9.2.1930 அன்று கடலூரில் 11.9 சென்டி மீட்டர் மழை பெய்ததே பிப்ரவரி மாதத்தில் பெய்த அதிகபட்ச மழையாக இருந்தது. ஆனால் 91 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விடிய, விடிய பெய்த கனமழை, முந்தைய சாதனையை முறியடித்தது.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழை முன்னறிவிப்பு உள்ளது. கடலூரில் மழைக்கு சிறிய இடைவெளி உள்ளது. இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூரில் ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை என்பது கடுமையான மழை பொழிவாகும். இதில் காலை 4 மணி முதல் 8.30 மணி வரை மிக கனமழை பெய்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மழையா? என்று பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த வளி மண்டல சுழற்சியானது வடகிழக்கு பருவத்தின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் வடகிழக்கு பருவ மழை போன்ற வானிலை நிலவும் என்றார்.
Tags:    

Similar News