செய்திகள்
இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் - இந்திய கேப்டன் மிதாலிராஜ்

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

Published On 2021-06-26 19:33 GMT   |   Update On 2021-06-26 19:33 GMT
டெஸ்ட் போட்டியை தொடர்ந்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலும் ஷபாலி வர்மா அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைக்கிறார்.
பிரிஸ்டல்:

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்டலில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி ‘டிரா’ செய்தது. அறிமுக வீராங்கனையாக களம் இறங்கி இரு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய (96 மற்றும் 63 ரன்) இந்திய இளம் புயல் ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.

அடுத்து இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடக்கிறது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலும் ஷபாலி வர்மா அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைக்கிறார்.



இதற்கு முன்பு 22 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியுள்ள ஷபாலி வர்மாவை கடந்த மார்ச் மாதம் உள்ளூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சேர்க்காதது விமர்சனத்திற்குள்ளானது. அந்த தொடரில் இந்தியா 1-4 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. அதிரடியால் கவர்ந்திழுக்கும் ஷபாலி ஒரு நாள் கிரிக்கெட்டிலும் பிரமிக்க வைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் ஸ்மிர்தி மந்தனாவுடன் இணைந்து தொடக்க வீராங்கனையாக விளையாடுவார். கேப்டன் மிதாலிராஜ், துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுத்தால் இந்திய அணியால் இங்கிலாந்துக்கு கடும் சவால் கொடுக்க முடியும்.

ஹீதர் நைட் தலைமையிலான உலக சாம்பியனான இங்கிலாந்து வலுவான அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டாமி பீமோன்ட், நாட் சிவெர், அமே ேஜான்ஸ், அன்யா ஸ்ருப்சோலே, சோபி எக்லெஸ்டோன், கேத்தரின் புருன்ட் என்று திறமையான வீராங்கனைகள் நிறைய பேர் அந்த அணியில் உள்ளனர். அதுவும் உள்ளூர் சூழல் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 69 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 30-ல் இந்தியாவும், 37-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Tags:    

Similar News