செய்திகள்
கோப்புப்படம்

வீடு இல்லாதோர் தடுப்பூசிக்கு பதிவு செய்ய தடையா? - மத்திய அரசு மறுப்பு

Published On 2021-06-23 18:49 GMT   |   Update On 2021-06-23 18:49 GMT
டிஜிட்டல் முறையில் தடுப்பூசிக்கு பதிவு செய்ய ஆங்கில அறிவு தேவை, இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போன் தேவைப்படுகிறது
புதுடெல்லி:

நாட்டில் வீடு இல்லாதவர்கள் கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்ய முடியவில்லை. அவர்கள் பதிவு செய்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர் என சில ஊடகங்கள் குற்றம் சாட்டின.

டிஜிட்டல் முறையில் தடுப்பூசிக்கு பதிவு செய்ய ஆங்கில அறிவு தேவை, இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போன் தேவைப்படுகிறது, இந்த வசதிக்குறைவு, வீடு இல்லாதவர்கள் தடுப்பூசி போடுவதை இழக்க காரணியாக அமைகிறது எனவும் கூறப்பட்டது.

இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறியதாவது:-



இந்த கூற்றுகள் ஆதாரம் அற்றவை. உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்கு மொபைல் போன் உரிமை, முன் நிபந்தனை அல்ல. முகவரி ஆதாரம் அளிப்பதும் கட்டாயம் அல்ல. ஆன்லைனில் முன்பதிவு செய்வதும் கட்டாயம் கிடையாது.

தடுப்பூசி போடுவதற்கு கோவின் தளம் உதவுகிறது. தற்போது இது இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, வங்காளம், அசாமி, குருமுகி (பஞ்சாபி), ஆங்கிலம் என 12 மொழிகளில் உள்ளது. ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை ஆகிய ஏதாவது ஒன்று தடுப்பூசிக்கு தேவை.

இது போன்ற 9 அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றுகூட இல்லாதோருக்கும், செல்போன் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி அமர்வுகளை ஏற்படுத்துவதற்கு அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த வகையில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. இணையதள வசதி இல்லாதவர்கள், ஸ்மார்ட் போன் அல்லது செல்போன் இல்லாதவர்கள், நேரடியாக வந்து பதிவு செய்து தடுப்பூசி போடுகிற வசதி, அரசு தடுப்பூசி மையங்களில் உள்ளது. 80 சதவீதத்தினர் இப்படி நேரில் வந்து பதிவு செய்து தடுப்பூசி செலுத்துகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News