செய்திகள்
சாலை விபத்தில் பலியான மாணவர்கள்

மோட்டார்சைக்கிள்-மொபட் மோதல் - கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

Published On 2019-09-10 17:58 GMT   |   Update On 2019-09-10 17:58 GMT
ராயக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்-மொபட் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள வரகானபள்ளியை சேர்ந்தவர் சின்ன லட்சுமணன் (வயது 48). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி முனிரத்தினா (44). கெலமங்கலம் அருகே உள்ள நெருப்புகுட்டையை சேர்ந்த தனபால் என்பவருடைய மகன் தமிழரசு (19). இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அதே நெருப்பு குட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் சதீஷ் (17). இவரும் பாலக்கோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று தேன்கனிக்கோட்டையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சின்ன லட்சுமணனும், முனிரத்தினாவும் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அதே போல தமிழரசும், சதீசும் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். வரகானப்பள்ளியில் உள்ள ஒரு வளைவின் அருகில் வந்த போது சின்ன லட்சுமணன் சென்ற மொபட்டும், தமிழரசு சென்ற மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில், தமிழரசுவும், சின்ன லட்சுமணனும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முனிரத்தினாவும், சதீசும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள், விபத்தில் பலியான தமிழரசு, சின்ன லட்சுமணன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள்- மொபட் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News